கும்பகோணம்: கும்பகோணத்தைச் சேர்ந்த, சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் கே.ஆர்.வேல்முருகனின் மனைவி தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கும்பகோணம் சார் ஆட்சியரிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ‘கும்பகோணம் வட்டம், ஏராகரம், கீழத்தெருவில் வசித்து வருகிறேன், கடந்த 2024,நவ. 17-ம் தேதி மாலை எனது வீட்டின் வாசலில், வீட்டின் உரிமையாளர் மற்றும் சிலர், எனது மனைவி அஞ்சம்மாளை, தகாத வார்த்தைகளால் பேசினர். இதனை ஜன்னல் வழியாக என் மனைவி படம் பிடித்துக்கொண்டிருந்தார். இதனையறிந்த அவர்கள், ஆயுதங்களால் தாக்க முயற்சி மேற்கொண்டனர்.
பின்னர், எனது மனைவி வீட்டின் கதவை தாழிட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, நான் எனது நண்பர்கள், உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, என் மனைவி அஞ்சம்மாள் சேலையில் தூக்கிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தார். பின்னர், அவரை தூக்கிக்கொண்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்ற போது, செல்லும் வழியில் அஞ்சம்மாள் உயிரிழந்தார்.
இது தொடர்பாகச் சுவாமிமலை காவல் நிலையத்தில் கடந்த 18-ம் தேதி புகாரளித்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நேரில் பார்த்தவர்களை மிரட்டி வருவதால், அவர்கள் சாட்சி கூற வருவதற்கு அச்சப்படுகிறார்கள். எனவே, எனது மனைவி அஞ்சம்மாள் தற்கொலைக்கு காரணமானவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
» அரசுப் பணிக்காக மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக பாஜக வலியுறுத்தல்
» சென்னையில் மேலும் 3 இடங்களில் நாய் இன கட்டுப்பாட்டு மையங்கள்: மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றம்