சென்னையில் மேலும் 3 இடங்களில் நாய் இன கட்டுப்பாட்டு மையங்கள்: மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றம்

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியின் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளில் அவசர காலங்களில் தனியார் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் மதிப்பூதிய அடிப்படையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிறப்பு மருத்துவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஏற்கெனவே ரூ.1000 வழங்கப்பட்டது. அதை ரூ.2500 ஆக உயர்த்தவும், மயக்க மருந்து நிபுணர்களுக்கு ரூ.1000-லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு தொடர்ந்து மளிகை, காய்கறி மற்றும் சமையல் எரிவாயு உருளைகளை வாங்க மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதவரம், குமரப்பாபுரம் முதன்மை சாலைக்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்ட மன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை சார்பில் கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிக்காக பாலவாக்கம், கொட்டி வாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நில வகைப்பாடு கொண்ட நிலத்தில் நெடுஞ்சாலை துறைக்கு நில மாற்றம் செய்வதற்கு தடையின்மை சான்று வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 245 பள்ளிகளுக்கு ரூ.8 கோடியில் 980 சிசிடிவி கேமராக்களை பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதவரம், அண்ணாநகர், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களின் 3 இடங்களில் நாய் இன கட்டுப்பாட்டு மையம் ரூ.4 கோடியே 17 லட்சத்தில் அமைக்க மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 8,340 சாலைகளில் புதிய டிஜிட்டல் பெயர் பலகைகள் ரூ.14 கோடியில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கல்வித் துறையில் பணி நியமன வகை, பணியிட மாற்றம் குறித்து தனி வரைவு விதிகளை உருவாக்கி அரசுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE