கும்பகோணம்: சேதமடைந்த தொகுப்பு வீடுகளில் இருந்தவர்களை சமுதாயக் கூடத்தில் தங்க வைத்த எம்எல்ஏ

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் கொத்தங்குடியில் உள்ள சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளில் இருந்தவர்களை பலத்த மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தார் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன்.

கொத்தங்குடியில் 1988ம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்களாக உள்ள இவர்கள், அண்மைக் காலமாக பெய்து வரும் பலத்த மழையினால், ஆபத்தான சேதமடைந்திருந்த தொகுப்பு வீடுகளில் அவதிக்குள்ளாகி தங்கி வந்தனர். இந்தத், தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் என அப்பகுதியினர் கும்பகோணம் எம்எல்ஏ-விடம் தகவல் அளித்தனர்.

அதன்பேரில், அவர் வருவாய் மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு, உடனடியாக அங்குள்ள தொகுப்பு வீடுகளில் உள்ளவர்களை, கொத்தங்குடி சமுதாயக் கூடத்தில் தங்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து, காலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுவாமிநாதன் ஆகியோர், அந்தத் தொகுப்பு வீடுகளில் உள்ள சுமார் 140-க்கும் மேற்பட்டோரை, அங்கிருந்து அழைத்து வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொத்தங்குடியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர்.

இதையறிந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், அங்கு நேரில் சென்று, தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்த்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்து அவர்களுக்கு மதிய உணவு மற்றும் பிஸ்கட் வழங்கினார். அவருடன் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் கணேசன், கோவிலாச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகர், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் கூறியதாவது, ”கொத்தங்குடியில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடு சேதமடைந்துள்ளது. பலத்த மழை பெய்தால் பெரும் விபரீதம் ஏற்படும் என்பதால் அங்கிருந்த 140-க்கும் மேற்பட்டவர்கள் கொத்தங்குடியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான காலை, மதியம், இரவு உணவுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மழை காலம் முடியும் வரை அங்கு தங்க வைக்கப்பட உள்ளனர்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE