சென்னை: அரசுப் பணிக்காக மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. கிறிஸ்தவ மதத்தை கடைப்பிடிப்பவரை அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதை சுட்டிக்காட்டி, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் பாதிக்கப்படுபவர்களை கை தூக்கி விடுவதற்காகவே இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. ஆனால், 'எங்கள் மதத்தில் ஜாதிகளே இல்லை' என்று கூறி மதம் மாற்றுபவர்கள் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறித்துக் கொள்வதை ஏற்க முடியாது என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை இப்போது உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
மதம் மாறி பல ஆண்டுகள் ஆனவர்கள் கூட, இந்து பட்டியலினத்தவர் என்று சான்றிதழ் பெற்றுக் கொண்டு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால், உண்மையிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அரசு வேலைக்காக மதம் மாறுவது மோசடி என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னை மேயர் தேர்தலிலும், பல்வேறு சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் மீது சர்ச்சை எழுந்தது.
இது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அரசு பணிகளில் பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களில் சரி பார்த்து, அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுக்கு பேச்சு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்’ என்று ஏ.என்.எஸ் பிரசாத் கூறியுள்ளார்.