பம்மல்: தாம்பரம் மாநகராட்சி சார்பில் கீழ்கட்டளை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை பம்மலில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை சுத்தம் செய்து, ஊழியர்கள் உணவுகளை தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது அம்மா உணவகத்தில் மேல் கூரை பால்ஸ் சீலிங் திடீரென பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இதில் அங்கு துப்புரவு பணியை மேற்கொண்டு இருந்த உமா (46) படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதிகாலையில் இச்சம்பவம் நடந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநகராட்சி அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பணிகள் முடியும் வரை உணவகம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அதிமுக பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ தன்சிங் கூறும்போது, “தற்போது அனைத்து அம்மா உணவகங்களும் மிகவும் பாழடைந்த கட்டிடம் போல் உள்ளது.
» மாமல்லபுரம் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு: தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு
உணவும் சரிவர தயாரிக்கப்படுவதில்லை. தரமாகவும் இல்லை. அதிமுக ஆட்சியில் சிறப்பாக பராமரிக்கப்பட்டதால் பலர் பயன் பெற்று வந்தனர். விரைவில் அம்மா உணவகத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்.