அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச.15-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இதில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு இருமுறை செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆண்டுக்கொரு முறை பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். அதன்படி, நிகழாண்டுக்கான அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் வரும் டிச.15-ம் தேதி, காலை 10 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே அதை கலைத்துவிட்டு, 2026 தேர்தலில் அதிமுக வெல்லும் வகையில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உட்கட்சி தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில், அவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தயாராவது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள கள ஆய்வுக்குழு கூட்டங்களில் நிர்வாகிகளிடையே ஏற்பட்டுவரும் மோதல்களுக்கான காரணங்கள், தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்க இருப்பதாக தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், பல்வேறு வரிகள் உயர்வு தொடர்பாக திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல், கைது விவகாரம், மாநிலங்களுக்கான நிதி பகிர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் சில தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உள்ளாட்சி மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பழனிசாமிக்கு வழங்குவது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது