சென்னை: ‘நானும் ரவுடிதான்’ படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்ஃப்ளிக்ஸ் தரப்புக்கு எதிராக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவன தயாரிப்பில் கடந்த 2015-ல் வெளியான திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இந்த படத்தில் நடித்த நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்களை தொகுத்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆவண படத்தில், ‘நானும் ரவுடிதான்’ படத்துக்காக எடுக்கப்பட்ட திரையிடப்படாத சில காட்சிகளும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
தங்கள் அனுமதியின்றி அந்த காட்சிகளை பயன்படுத்தியதாக கூறி, நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, வலைதளங்களில் தனுஷை நயன்தாரா கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், நயன்தாரா தம்பதியிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு, தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரேயஸ் சீனிவாசன் தாக்கல் செய்துள்ள மனு: ‘நானும் ரவுடிதான்’ படத்தில் பணியாற்றிய அனைவரது பங்களிப்பும் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமானதே. அவர்களது வேலைக்கு ஊதியம் வழங்கிய பிறகு, படத்தின் அனைத்து உரிமைகளும் காப்புரிமை சட்டத்தின்கீழ் எங்களுக்கே சொந்தம். நயன்தாராவும் இதை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.
ஆனால், நயன்தாராவின் திருமண நிகழ்வுகளை தொகுத்து வெளியிட்ட ஆவண படத்தில், எங்களது படதயாரிப்பின்போது எடுக்கப்பட்டசில வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக எங்களிடம் முன்அனுமதி பெறவில்லை. அதேநேரம், இதற்காக 3 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று கேட்டு எங்களை அணுகியதாக கூறி, தனுஷுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்களது பட காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
» “ராமதாஸ் விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை” - திருமாவளவன்
» உதகை வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: 4 நாள் பயணத் திட்டம் என்ன?
நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. வுண்டர்பார் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் கவுதம் எஸ்.ராமன், நயன்தாரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகினர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் தரப்புக்கு எதிராக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் நிறுவனம் வழக்கு தொடர அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.