குற்ற செயல்களை முற்றிலும் தடுக்க காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

தமிழகத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான இரா.குமரகுரு தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஏழுமலையான் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.ரூ.40 கோடி செலவில் நடைபெறும் இப்பணியின் ஒரு பகுதியாக, திருப்பதி தேவஸ்தான அன்னதான மண்டபம் கட்டும் பணியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று பூமி பூஜை செய்து, தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்து 43 மாதங்கள் கடந்துள்ளன. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்கியிருக்காது. ஆன்லைன் சூதாட்டம், ரம்மி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு சட்டப்பேரவையில் தனி சட்டம் கொண்டுவருவோம்.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கொள்ளை, கொலை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இனியாவது முதல்வர் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளி்க்க வேண்டும். அப்போதுதான் குற்றச் செயல்களைத் தடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு பழனிசாமி கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE