கயத்தாறு அருகே பரபரப்பு: தேங்காய்களுக்கு இடையே மறைத்து மினி லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கயத்தாறு அருகே மினி லாரியில் தேங்காய்களுக்கு இடையே மறைத்து கடத்திய 10 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியையடுத்த குமாரகிரி பகுதியில் ரேஷன் அரிசியை வாங்கிய மர்மநபர்கள் அதனை மினி லாரியில் மூட்டைகளாக கட்டி ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேரடியாக ஆட்சியரை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் வட்டாட்சியர் சுந்தரராகவன் தலைமையில் துணை வட்டாட்சியர் கோவிந்தராஜன், கடம்பூர் வருவாய் ஆய்வாளர் துரைச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் சுடலைமாடன் ஆகியோர் கொண்ட குழுவினர் குமாரகிரி பகுதிக்குச் சென்றனர். அங்கு லாரி எங்கு சென்றது என்று தெரியவில்லை.

இதையடுத்து வட்டாட்சியர் ஒரு காரிலும், துணை வட்டாட்சியர் மோட்டார் சைக்கிளிலும் 2 குழுக்களாக பிரிந்து கயத்தாறு வட்டத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை பெய்தது. வெள்ளாளங்கோட்டையில் இருந்து வலசால் செல்லும் சாலையில் பெரிய லாரி சென்றதற்கான தடம் தெரிந்தது. அந்த லாரி தோட்டத்தின் வழியாக இறங்கி சென்றது.

இதனை கவனித்த வருவாய்த்துறை குழுவினர் அந்த வழியாகச் சென்றபோது, தனியார் தோட்டப்பகுதி அருகே கோயில் முன்பு தார்பாய் கொண்டு மூடப்பட்ட நிலையில் ஒரு மினி லாரி நின்றது. அந்த லாரியை சோதனையிட்ட போது, அதில் தேங்காய்கள் இருந்தன.

அதற்கு கீழ் பகுதியில் மூட்டைகள் இருந்ததை கவனித்த அதிகாரிகள், உடனடியாக தேங்காய்களை அப்புறப்படுத்திவிட்டு பார்த்தபோது, 250 மூட்டைகள் இருந்தன. இதில், தலா 40 கிலோ வீதம் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மினிலாரியில் யாரும் இல்லை. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் அரிக்கண்ணனிடம் ஒப்படைத்தனர்.

ஆட்சியரின் உத்தரவின்பேரில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, அவர்கள் தேடுவது குறித்து ரேஷன் அரிசி கடத்தல்காரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். ஆனால், அவர்களால் தொடர்ந்து செல்ல முடியாத நிலையில், மிகவும் கிராமப்புற பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் சென்று மினி லாரியை நிறுத்தி விட்டு தப்பி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு பகுதிகளில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE