புதுச்சேரி: ஆளுநருடன் மோதலோ, கருத்து வேறுபாடோ இல்லை. அவர் ஒப்புதலுடன்தான் திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாகும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது சூறை காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், ரமேஷ் எம்எல்ஏ, ஆட்சியர் குலோத்துங்கன், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீன தயாளன், உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல், புதுவை நகராட்சி ஆணையர் கந்தசாமி, எஸ்எஸ்பி கலைவாணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
அக்கூட்டத்தை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று கூறியதாவது: "புதுச்சேரியில் புயல் கரையை கடக்க கூடும் நிலை ஏற்பட்டால் அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை இரண்டு வந்துள்ளது. நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை நீர் தேங்காத வகையில் நீரை வெளியேற்ற. நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக 60 மோட்டார்கள் தயாராக உள்ளன. அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளது. கடலுக்குள் மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
» கனமழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை!
» நெருங்கும் புயல், கொந்தளிக்கும் கடற்சீற்றம் - 9 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
மின்சாரம், குடிநீர் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். மழையால் பாதிக்கப்படுவர்களை தங்க வைக்க 21 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. புயல் நகரும் விதம் சொல்ல முடியாது. தற்போது அறிவித்தப்படி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுத் துறை அதிகாரிகள் களத்தில் உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சிகள் குறை சொல்வது வழக்கம். அரசு கடமையை செய்து வருகிறது.
புதுச்சேரியில் மழை நீர் தேங்கவில்லை. முன்பு இருந்ததை விட தற்போது தேங்குவதில்லை. அதற்கு அரசு எடுத்த நடவடிக்கைதான் காரணம். எதிர்க்கட்சிகள் கவலைப்பட தேவையில்லை.. தற்போது பேரிடர் நிதி தேவையான அளவு இருக்கிறது. முன்பு இருந்ததை விட தரமான சாலைகள் போடப் படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் புதிய பேருந்து நிலையம், குமரகுருபள்ளம் கட்டுமான பணிகள் ஒப்பந்த புள்ளியே ரூ.55 கோடியில் இருக்கையில், எப்படி ரூ.29 கோடி ஊழல் நடக்கும். அங்கு நடந்துள்ள பணிகளை பாருங்கள், முடிவடையும் தருவாயில் உள்ளது.
ஆளுநர் கைலாஷ்நாதன் உடன் எந்த நிலையிலும் மோதலோ, கருத்து வேறுபாடோ இல்லை. சில நேரங்களில் நிகழ்வுகளில் பங்கேற்காமல் போய்விடலாம். அதற்கு வேறு காரணம் இல்லை. அவர் ஒப்புதலால்தான் திட்டங்கள் நடக்கிறது. ரேஷன் கடைகளை திறந்துள்ளோம். டிசம்பரில் அரிசி தந்துவிடுவோம். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் திட்டத்தில் 56 ஆயிரம் பேருக்கு தந்துள்ளோம். காலிப் பணி இடங்களை நிரப்பி வருகிறோம். ஆசிரியர் பணிகளை நிரப்பி வருகிறோம். சிலர் நீதிமன்றத்தை நாடுவதால் தாமதமானது. பத்தாயிரம் பணியிடங்களை நிரப்பி வருகிறோம்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.