கனமழை எச்சரிக்கை: டெல்டா மாவட்டங்களுக்கு அதிகாரிகள் விரைந்தனர்; தயார் நிலையில் மீட்பு குழு

By KU BUREAU

மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை நிவாரண முகாம்களுக்கு மாற்றவும், வெள்ளநீர் தேங்கி பயிர்கள் சேதமடைவதைத் தடுக்கவும் மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து கனமழையை எதிர்கொள்ள டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்கெனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஆயத்த நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களிடம், அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, போதுமான நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதுடன், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கென பல்துறை மண்டலக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து முதல்வர் பேசும்போது, ‘‘நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் . கனமழையின் போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும். வெள்ளநீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மின்சார வசதி தடையின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நீர்வளத்துறை செயலர் க.மணிவாசன், வருவாய்த்துறை செயலர் பெ.அமுதா, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவன மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கிடையே, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளனர். தஞ்சாவூருக்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அனுப்பப்பட்டனர். அந்த வகையில், நாகப்பட்டினத்துக்கு ஜானி டாம் வர்கீஸ், மயிலாடுதுறைக்கு கவிதா ராமு, திருவாரூருக்கு காயத்ரி கிருஷ்ணன், கடலூருக்கு எஸ்.ஏ.ராமன் ஆகியோர் சென்றுள்ளது குறி்ப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE