தமிழக ஆளுநரின் செயல்பாடுகளால் துணைவேந்தர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்படுகிறது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு 2024-25-ம் ஆண்டுக்கான இணையவழி கலந்தாய்வு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு விருப்ப மாறுதல் ஆணையை அமைச்சர் நேரில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறைச் செயலர் கோபால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆப்ரகாம், கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பொதுகலந்தாய்வு முறைகேடு ஏதுமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடந்தது. அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 198 பேருக்கும், தொழில்நுட்பக் கல்லூரிகளைச் சேர்ந்த 93 பேருக்கும் பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
» “எனக்கும் அரசியல் கட்சி தொடங்க ஆசை உள்ளது; எதிர்காலத்தில் தொடங்குவேன்” - பார்த்திபன் விருப்பம்!
» சிதம்பரம் அண்ணாமலைநகரில் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
தமிழகத்தில் பல்கலைக்கழங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் நியமனத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரால் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. ஆளுநரின் செயல்பாடுகளால் துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்படுகிறது. மாநில உரிமை, ஆசிரியர்கள், மாணவர்கள் நலன், பல்கலைக்கழக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, துணைவேந்தர் நியமனம் தொடர்பாக முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதன்படி, விரைவில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, காமராஜர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கும் தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.