“எனக்கும் அரசியல் கட்சி தொடங்க ஆசை உள்ளது; எதிர்காலத்தில் தொடங்குவேன்” - பார்த்திபன் விருப்பம்!

By KU BUREAU

எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு. அரசியல் கட்சி தொடங்க ஆசையிருக்கிறது. எதிர்காலத்தில் கட்சி தொடங்குவேன் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கூறினார்.

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை இயக்குநர் பார்த்திபன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, புதுவை மாநிலத்தில் சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்ததற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் சுற்றுலா வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், சினிமா, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்திருப்பது பாராட்டுக்குரியது. கரோனா காலத்தால் உயர்த்தப்பட்ட படப்பிடிப்புக் கட்டணம் ரூ.28 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும், சீரியலுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் குறைத்துள்ளனர். தமிழக அரசும் இதேபோல கட்டணக் குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

நல்ல படத்தை மோசமான விமர்சனத்தால் தோல்வியடையச் செய்வது சரியல்ல. திரையுலகில் பெண்களுக்கு முன்பைவிட அதிக பாதுகாப்பு உள்ளது. தமிழ் திரைப்படக் கலைஞர்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பது கவலைக்குரியது. ஏ.ஆர்.ரகுமானுக்கு இசை தவிர வேறு எதுவும் தெரியாது.

தமிழகத்தில் மேடைப் பேச்சு மூலமாகவே அரசியலில் வென்று வருகின்றனர். அதேபோல, விஜய் பேச்சும் வரவேற்கத்தக்கது. விஜய், சீமான் ஆகியோரது பேச்சுகள் வெவ்வேறு வகையில் பாராட்டத்தக்கவை. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். ஆளும்கட்சியை எதிர்த்தால்தான் ஹீரோவாக முடியும்.

எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு. ஆனால், நான் யாரையும் சார்ந்து இருக்கமாட்டேன். எனக்கும் அரசியல் கட்சி தொடங்க ஆசையிருக்கிறது. எதிர்காலத்தில் கட்சி தொடங்குவேன். இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE