புயல் ‘அலர்ட்’ முதல் பள்ளிகளுக்கு மழை விடுமுறை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

புயல் உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 310 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்-தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும். இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் நிலை என்ன? - பாலச்சந்திரன் விளக்கம்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதியில் நல்ல மேகக் கூட்டங்கள் உருவாகியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் இருந்து மேகக் கூட்டங்களுக்கு காற்று சென்று கொண்டிருக்கிறது. இதனால், இது புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். அது கரையைக் கடக்கும் பகுதி இன்னும் கணிக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி, அது கடலோரப் பகுதி கரைக்கு இணையாக, சுமார் 150-லிருந்து 200 கி.மீட்டர் தொலைவில் நிலை கொள்ளக்கூடும். அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

கடலின் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருந்தால் அதுவொரு சாதகமான நிலை. அதேபோல், காற்று குவிதல் மற்றும் விரிவடைதலும் முக்கியம். இந்த காற்று குவிதலும், விரிவடைதலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, புயல் உருவாவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காற்று திசை மாறும் பகுதி, அதாவது காற்றின் வேகமும், திசையும் சாதகமான சூழலில் இருப்பதால், புயலாக உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேநேரம் புயல் கரையை கடக்கும் பகுதி இன்னும் கணிக்கப்படவில்லை என்று இந்திய வானிலை மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் எங்கெல்லாம் மிக கனமழை? - அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ரெட் அலர்ட் எனப்படும் அதிகனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தெரிவித்தது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

புதன்கிழமையைப் பொறுத்தவரையில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 30-ம் தேதி வரை, மீனவர்கள் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: கனமழையினை எதிர்கொள்ள டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இதில் காணொலிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், கனமழையின் போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும் என்றும், வெள்ளநீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மின்சார வசதி தடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனிடையே, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளது.

‘வளர்ந்த இந்தியா’ இலக்கை நோக்கி... - குடியரசுத் தலைவர்: இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு உரையுடன், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசமைப்பு லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது அடிப்படைக் கடமைகளைச் மேற்கொள்ள வேண்டும். மேலும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தேசிய இலக்கை அடைய உழைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரைக் கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் குறித்து பேசியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சிதம்பரம், விழுப்புரம், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாமகவினர் செவ்வாய்க்கிழமை மறியல் மற்றும் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

பாடகர் இசைவாணி குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல் - “சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதத்தால் இனத்தால் மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலை தூக்க முடியாது” என ‘ஐ எம் சாரி ஐயப்பா’ பாடல் விவகாரத்தில் பாடகர் இசைவாணி மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார்.

சிறு, குறு நிறுவனங்கள் நசுக்கப்படுவதாக குற்றச்சாட்டு: மத்திய அரசு வாடகை கட்டிடத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. உலக அளவிலான போர் உள்ளிட்ட காரணங்களால் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் உள்நாட்டு வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பது நியாயமற்ற செயல். மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் இலவச திட்டங்களுக்கான நிதிக்காக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நசுக்குகின்றனர் என்று திருப்பூர் தொழில் துறையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இம்ரான் கான் ஆதரவாளர்கள் பேரணியில் மோதல்: பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது ஆதரவாளர்கள் திங்கள்கிழமை இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். ஊடகத் தகவலின்படி போராட்டக்காரர்களால் ஒரு காவலர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிரடிப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

வங்கதேசத்தில் இந்துக்கள் கொந்தளிப்பு! - வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்துக்கள் மட்டுமன்றி புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மீதும் கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை கண்டித்து வங்கதேச இஸ்கான் அமைப்பின் பொதுச் செயலாளர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மாச்சாரி தலைமையில் வங்கதேசம் முழுவதும் அமைதி வழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற இந்துக்கள் மீது ராணுவம் மற்றும் போலீஸார் மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்தச் சூழலில், வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சின்மய் கிருஷ்ணதாஸ் பிரம்மாச்சாரி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சின்மயி கிருஷ்ணதாஸ் பிரச்மாச்சாரியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

அவரை விடுதலை செய்யக் கோரி சிட்டகாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு பெருந்திரளான இந்துக்கள் கொந்தளிப்புடன் திரண்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பின்னர் அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். சின்மய் கிருஷ்ணதாஸை விடுதலை செய்யக் கோரி வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும் இஸ்கான் பொதுச் செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

விஜய்க்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது, மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது என தவெக தலைவர் விஜய்க்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மழை விடுமுறை: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை மழை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE