“2026 தேர்தலுக்குள் திமுக கூட்டணி உடையும்” - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

By கி.தனபாலன்

பரமக்குடி: வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் திமுக கூட்டணி உடையும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பரமக்குடியில் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கள ஆய்வுக்கூட்டம் பரமக்குடியில் இன்று (நவ.26) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரமக்குடி நகர் செயலாளர் ஜமால் வரவேற்றார். இக்கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை, சுதா பரமசிவன் ஆகியோர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினர். மேலும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை முறையாக வழங்கப்பட்டதா? என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

பின்பு கட்சியின் அமைப்புச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மாவட்டம் தோறும் அதிமுக கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாவட்டமாக சென்று உறுப்பினர் அட்டை எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையும் கேட்டு அறிந்து வருகிறோம். அனைவருக்கும் எவ்வித தவறும் இன்றி முறையாக உறுப்பினர் அட்டை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த கள ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. வரும் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பார். எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும் என களப் பணி ஆற்றி வருகிறோம்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பது உறுதி. கள ஆய்வுக் கூட்டங்களில் எந்த சலசலப்புகளும் இல்லை. தொண்டர்களிடையே ஏற்படும் ஆர்வம் தான் அது. அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்கின்றனர். அதிமுக கட்டமைப்பு உறுதியாக, வலிமையாக உள்ளது. கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும். தேர்தல் நேரத்தில் தான் அது பற்றி தெரிய வரும். திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. வரும் சட்டப்பபேரவை தேர்தலுக்குள் திமுக கூட்டணி நிச்சயமாக உடையும்” என நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE