சென்னை: தற்காலிக கால்நடை மருத்துவர்களை பணி நீக்கம் செய்துவிட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கு பணி நியமனம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நவ.28 அன்று அதிகாரிகள் அளவிலான கூட்டம் நடைபெறும் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான அருள்ஜோதி உள்பட 83 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அரசு கால்நடை மருத்துவமனைகளில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் உதவி கால்நடை மருத்துவர்களுக்கான பணி நியமனம் மேற்கொள்ளவில்லை. இதனால் காலிப்பணியிடங்கள் தற்காலிக மருத்துவர்கள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்காலிக கால்நடை மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோர இயலாது என்றும், இருப்பினும் எதிர்காலத்தில் நடைபெறும் கால்நடை மருத்துவர்களுக்கான பணி நியமனத்தில் ஆண்டுக்கு 5 மதிப்பெண் வீதம் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கலாம் என்றும், வயது வரம்பில் தளர்வு அளித்தும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையி்ல் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 731 உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றும் நாங்கள் அனைவரும் விகிதாச்சார அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளோம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 187 தற்காலிக மருத்துவர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்.
» காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: கோவில்பட்டியில் தமாகா ஆர்ப்பாட்டம்
» செல்லூர் ராஜு Vs சரவணன்: மதுரை அதிமுகவினர் மோதலின் பின்னணி என்ன?
தகுதியற்ற 57 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 187 மருத்துவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதனால் முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள எங்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. எனவே சட்டவிரோதமாக பணியாற்றி வரும் 187 தற்காலிக மருத்துவர்களை பணி நீக்கம் செய்துவிட்டு எங்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், மனுதாரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக அதிகாரிகள் அளவிலான கூட்டம் வரும் நவ.28 ( நாளை ) நடைபெறவுள்ளது. அதில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, அந்த கூட்டத்தி்ல் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை வரும் டிச.12-க்கு தள்ளி வைத்துள்ளார்.