மதுரை: மதுரை மாநகர அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலுக்கு, செல்லூர் ராஜூவுக்கும், கடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த மருத்துவர் பா.சரவணனுக்கும் இடையே இருந்து வந்த நீண்ட நாள் திரைமறைவு மோதலே முக்கிய காரணம் என தொிய வந்துள்ளது.
மதுரை மாநகர மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் கட்சியினர் இரு தரப்பினராக மோதலில் ஈடுபட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த மோதலின் பின்னணியில் கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்ட பா.சரவணன், தனது தோல்விக்கும், கட்சி 3-ம் இடம் சென்றதற்கும் மாநகர செயலாளரான செல்லூர் கே.ராஜூவே முக்கிய காரணம் என நினைப்பதும், அதனை கள ஆய்வுக்கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் மூலம் வெளிப்படுத்தியதுமே காரணம் எனக் கூறப்படுகிறது.
இக்கூட்டம் தொடங்கியதும், மாநகர செயலாளரும், முன் னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, ‘நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்பார்கள். நீங்கள் ஒவ் வொருவராக கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த ஆய்வுக் கூட்டம் சிறப்பாக நடந்தது என்று அவர்கள் இருவரும் தெரிவிக்க வேண்டும்’ என்றார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு நிறை வேறாமல், கூட்டம் கைகலப்பில் முடிந்தது.
இது தொடர்பாக மருத்துவர் சரவணன் கூறியதாவது: கருத்துச் சொல்ல வந்தவர்களும் அதிமுக வினர்தான். அவர்களை வேறு கட்சிக்காரர்கள் என செல்லூர் ராஜூ பொய் சொல்கிறார். செல்லூர் ராஜூவால் புகார் கூறப்பட்டுள்ள செழியனும், ராமச்சந்திரனும் சிறப்பாக தேர்தல் பணியாற்றியதற்காக கட்சியின் பாராட்டைப் பெற்றவர்கள்.
» ‘கங்குவா’ தோல்வி: கோயிலில் யாகம் நடத்திய சூர்யா- ஜோதிகா?
» காதலனால் கொன்று புதைக்கப்பட்ட பெண்: 10 மாதங்களுக்குப் பிறகு காட்டில் சடலம் மீட்பு
கட்சியின் உண்மை நிலையை சொல்ல வந்ததை பொறுக்க முடியாமல் அவர்கள் என்னுடைய ஆதரவாளர்கள் என்று பிரச்சினையை திசை திருப்ப பார்க்கிறார். கள ஆய்வு என்று சொல்லிவிட்டு ‘மேட்ச் பிக்ஸிங்’ செய்வதுபோல் அவருக்கு வேண்டியவர்களை மட்டும் செல்லூர் ராஜூ பேச வைக்கிறார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் ‘அமாவாசை’யாக மாறி விடுவார் என்று வெளிப்படையாக பேசினார். அதேநேரம் நான் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்கேற்ப திரைமறைவில் செயலாற்றியது போலவே அவரது பணி இருந்தது. கள ஆய்வுக் கூட்டத்துக்கு வெளியே சென்று பார்த்தால்தான் அதிமுகவின் நிலை தெரியும். அதை அடிமட்ட தொண்டன் பேச முயற்சிக்கிறான். அதை கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு ‘கருத்துச் சொல்ல வந்த கட்சியினரை தாக்க முயற்சிக்கின்றனர்.
இவரது தலைமையில் மதுரை மாநகர அதிமுக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவினர் அனைவருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பழனிசாமி முதல் வராக வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது. ஆனால் அதற்கான கருத்துகளை சொல்லவிடாமல் செல்லூர் ராஜூ தடுக்கிறார்” இவ்வாறு அவர் கூறினார். செல்லூர் ராஜூவுக்கு எதிராக பா.சரவணன் செயல்படுவதன் பின்னணியில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகி ஒருவரும், மேலிட ஆதரவும் இருப்பதாகக் கட்சியினர் சிலர் கூறுகின்றனர்.
பல கட்சியில் இருந்தவர்: இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் கேட்டபோது, ‘மக்கள் வாக்களித்தால்தான் யாரும் வெற்றிபெற முடியும். பா.சரவணன் பல கட்சிகளுக்குச் சென்று வந்தவர். அதனால் அவருக்கு கட்சியை பற்றியெல்லாம் கவலையில்லை. யாரையும் பேச அனுமதிக்கவில்லை என்று சொல்வது பொய்.
நாங்கள் அவர்களை பேசத்தான் சொல்லி யிருந்தோம். கருத்துச் சொல்வது அவர்கள் நோக்கமில்லை. ஊடகங்களில் தங்கள் பெயர் வர வேண்டும். அதன் மூலம் கட்சிக்கும், எனக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு அந்த 3 பேரும் கூட்டத்துக்கு வந்தனர். நன்றாக நடந்து கொண்டிருந்த கூட்டம், அவர்களால் இப்படி ஆகிவிட்டது’ என்றார்.
மாவட்ட செயலாளர் போட்டியில் பா. சரவணன்: செல்லூர் ராஜூ ஆதரவு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தகராறில் ஈடுபட்டவர்கள், சரவணனின் ஆதரவாளர்கள்தான். சரவணன் மக்களவைத் தேர்தலில் தோற்றதோடு, மூன்றாமிடம் சென்றதற்கு செல்லூர் கே.ராஜூதான் முக்கிய காரணம் என நினைக்கிறார். அதனால் அவரால் செல்லூர் ராஜூவுடன் இணக்கமாக செயல்பட முடியவில்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் சரவணனுக்கு ‘சீட்’ கொடுக்க செல்லூர் கே.ராஜூ பரிந்துரைக்க மாட்டார் என்று நினைக்கிறார்.
சரவணன் திமுக, பாஜக, மதிமுக என பல கட்சிகள் மாறி, மாறி வந்தவர். அதுவே அவருக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியது. கடைசி நேரத்தில் செலவு செய்யாமல் கையை சுருக்கினார். தற்போது சிலரின் தூண்டுதலின் பேரில், மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு சரவணன் முயற்சி செய்து வருகிறார். தூண்டுதல் காரணமாகவே கூட்டத்தில் தகராறு செய்தனர்.
இதை நன்கு உணர்ந்ததால்தான், மேடையிலேயே செல்லூர் கே.ராஜூ சரவணனிடம் “இதுவெல்லாம் உன் வேலைதானப்பா” என்று கேட்டார். கூட்டத்தில் தகராறு செய்தவர்கள், சரவணன் காரில்தான் வந்தனர்’’ என்றனர்.