கரூர் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி - பைக்கில் தப்பித்தபோது விபத்தில் சிக்கிய 2 பேர் மருத்துவமனையில் அனுமதி 

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: மருந்தகத்தில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி செய்தவர்களை போலீஸார் கைது செய்ய சென்றபோது தப்ப முயற்சித்ததில் 2 சக்கர வாகனம் பாலத்தில் மோதி காயமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் நரிகட்டியூரை சேர்ந்த விஜயா (54). கரூர் காந்திகிராமத்தில் மருந்தகம் நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு 11 மணியளவில் மருந்தகத்தில் இருந்தபோது அங்கு வந்த இளைஞர் மாத்திரைகள் கேட்டுள்ளார். மாத்திரையை எடுத்துக் கொண்டு வந்து இளைஞரிடம் விஜயா கொடுக்கும்போது அந்த இளைஞர் திடீரென விஜயா கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுக்க முயன்றார்.

விஜயா சங்கிலியை கெட்டியாக பிடித்து கொண்டு கூச்சலிட்டதால் இளைஞர் தப்பியோடிவிட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் மறுநாள் பரவி வைரலான நிலையில், இதுகுறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்தில் விஜயா அளித்த புகாரின்பேரில் போலீஸார் கடந்த 22ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகள் பற்றி தீவிர புலனாய்வு செய்ததில், கரூர் மாவட்டம் வீரணம்பட்டி காலனி தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (28) அவருக்கு உடந்தையாக இருந்த கரூர் தெற்கு காந்திகிராமம் சக்தி நகரில் வசிக்கும் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் (30) என தெரியவந்தது.

தனிப்படையினர் நேற்று (நவ. 25ம் தேதி) அவர்களை கைது செய்ய வீரணம்பட்டி சென்றபோது, போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்து இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பாலத்தில் மோதி விழுந்ததில் ரஞ்சித்குமாருக்கு கையிலும், சக்திவேலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டும் காயமடைந்தனர். போலீஸார் அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE