நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்: கொட்டும் மழையில் விவசாயிகள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் 

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், தலையில் முக்காடு போட்டுக் கொண்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார். இளைஞரணித் தலைவர் வி.அரவிந்த், செயற்குழு உறுப்பினர் ஜெ.பரமசிவம், மாவட்டத் தலைவர்கள் கடலூர் ஆர்.வெங்கடேஷன், அரியலூர் ச.சின்னப்பன், பெரம்பலூர் க.சிவசாமி உஉள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, கையில் மண் திருவோடு ஏந்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், ''விவசாயிகளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து திருவோடு ஏந்தி பிச்சை எடுக்க வைக்கக் கூடிய நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023-ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இலவச விவசாய மின் இணைப்புக்கு ஆபத்தான புதிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பசுமை ரயில் திட்டத்தை எம்.பி அருண்நேரு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி வசூலிப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்'' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. லால்குடி நகரத் தலைவர் ஆர்.குணசீலன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE