இரட்டை இலை சின்னம் குறித்த மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

By KU BUREAU

நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்ற விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்களை அளித்துள்ளேன். குறிப்பாக அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே இதுதொடர்பாக உரிய உத்தரவு பிறப்பி்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரையிலும் தலைமை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு ஆணையம் தரப்பில் பதில் அளிக்கும்போது, அந்த மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் டிச.2-க்கு தள்ளி வைத்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE