திமுக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணம்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

By KU BUREAU

திமுக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: புதுக்கோட்டையில் காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. திமுக ஆட்சியில் ஒருபுறம் போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கைக் காக்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில்லை. மறுபுறம் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகி உள்ளது.

சென்னையில் காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவரின் மரணம் குறித்து நான் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோதே, பச்சைப்பொய் பேசியவர்தான் இன்றைய முதல்வர் ஸ்டாலின். காவல் நிலைய மரணங்கள் தொடர்வதும், அதனை திமுக அரசு, அதிகாரத்தால் மூடி மறைக்க முயல்வதும் கண்டனத்துக்குரியது.

ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்தின்போது, சட்டத்துக்கு உட்பட்டு அதிமுக ஆட்சி செயல்பட்டபோதும், ‘மனித உரிமை’ என்ற சொல்லையே தாம்தான் கண்டுபிடித்ததுபோல் வானத்துக்கும், பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின், இன்று அவரது ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE