பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களுக்கு தனி இணையதளம் உருவாக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பைவிட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.
» ஸ்டாலின் அரசு மீண்டும் அமைய உறுதியேற்போம்: பிறந்தநாளையொட்டி திமுகவினருக்கு உதயநிதி வேண்டுகோள்
» மதுரை மாநகர் அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் செல்லூர் ராஜு - டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் மோதல்
இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணைய தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள செய்தியில், ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என்று பேரளவில் பேசப்படுகிறதே தவிர, இதுவரை குறைந்ததற்கான எந்தத் தரவுகளும் இல்லை. குழந்தை பருவத்திலிருந்து முதியவர்கள் ஆகும் வரை, பெரும்பாலான பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பது மிகுந்த வேதனையையும் அச்சத்தையும் அளிக்கிறது. சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களும் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள, தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். எந்த பிரச்சினைகளையும் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்’ என தெரிவித்துள்ளார்.