கோவை: கோவை காந்திமாநகர் எப்.சி.ஐ குடோன் சாலையில் கணபதி தீயணைப்பு நிலையம் உள்ளது. இங்கு தீயணைப்பு நிலைய அலுவலராக, தேனியைச் சேர்ந்த ஏ.முத்துச்செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர், தடையில்லாத சான்று பெற விண்ணப்பித்த ஒருவரிடம் நிலைய அலுவலர் முத்துச்செல்வன் உள்ளிட்டோர் லஞ்சம் தர நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விண்ணப்பதாரர் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் கணபதி தீயணைப்பு நிலையத்தில் திங்கள் (நவ.25) அன்று மாலை நுழைந்து சோதனை நடத்தினர். கணக்கில் வராத பணம் எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு வரை நடந்தது.
சோதனை நிறைவில் நிலைய அலுவலர் முத்துச்செல்வனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 41. ஆயிரத்து 500 தொகை இருந்ததை கண்டறிந்து போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த தொகைக்கு நிலைய அலுவலரால் உரிய கணக்கு காட்ட முடியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
» மனைவி பிரிந்ததால் அந்தரங்க புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பியவர் கைது @ புதுச்சேரி
» மதுரையில் 31 ஏக்கர் அரசு நில மோசடியை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் தடை