‘ராமதாஸுக்கு வேலை இல்லை’ - முதல்வர் ஸ்டாலின்: சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அதானி விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “அதானி விவகாரம் குறித்து துறையின் அமைச்சரே கூறியிருக்கிறார். அதை ட்விஸ்ட் செய்ய வேண்டாம்” என்றார்.
தொடர்ந்து, அதானி உடனான ஸ்டாலின் சந்திப்பு குறித்த ராமதாஸின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஸ்டாலினின் அதிகார அகம்பாவம்’ - அன்புமணி காட்டம் - “முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கத் தேவையில்லை. ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். ‘ராமதாஸுக்கு வேலை இல்லை’ கூறியது ஸ்டாலினின் அதிகார அகம்பாவத்தையே காட்டுகிறது. அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்தும் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
» “ஆணவம் வேண்டாம்...” - ராமதாஸ் குறித்த ஸ்டாலின் கருத்துக்கு தமிழிசை காட்டம்
» மக்களின் மனுக்களை அதிகாரிகள் நிலுவையில் வைப்பது கடமை தவறல்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதல்வரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதல்வர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! - தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலாக மாற வாய்ப்பு உள்ளதா? - “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாவது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். புயலைப் பொருத்தவரை, கடலின் வெப்பநிலை, கீழ்ப்பகுதியில் உள்ள காற்று, மேல்பகுதியில் காற்று விரிவடையும் தன்மை, மத்திய பகுதியில் ஈரப்பதம் செல்வது மற்ற நிகழ்வுகள் இவையெல்லாம் சேர்ந்துதான் முடிவு செய்யப்படும். எனவே, தற்போது நிலவும் இந்த நிலை தொடரும்போது, அடுத்த வரும் 5 தினங்களுக்கு குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் நல்ல மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் முதல் நாளிலேயே முடக்கம்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய சில நிமிடங்களில் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. அவையை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஏற்கெனவே கொடுத்திருந்த நோட்டீஸைக் குறிப்பிட்ட அனுமதி கோரினர்.
ஆனால் அவைத் தலைவர் ஓம் பிர்லா அத்தகைய விவாதங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் தொடர் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, ‘அதிகாரப் பசியைக் கொண்ட கட்சியை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். அந்த விரக்தியில் சில கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன’ என்று பிரதமர் மோடி சாடினார்.
தமிழக சட்டப்பேரவை டிச.9-ல் கூடுகிறது - தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது, வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
உ.பி. கலவரம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை: உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. 30 போலீஸார் காயமடைந்த நிலையில் அப்பகுதியில் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டது.
ஆஸி.க்கு எதிராக இந்தியா அபார வெற்றி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
யார் யாரை வாங்கியது சிஎஸ்கே அணி? - ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும், டேவன் கான்வேயை ரூ.6.25 கோடிக்கும், கலீல் அகமதுவை ரூ.4.8 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை (ரூ.4 கோடிக்கும், ராகுல் திரிபாதியை ரூ.3.40 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.
நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கும், விஜய் சங்கரை ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது. அதன் தொடர்ச்சியாக, சேர் கரணை ரூ.2.40 கோடிக்கும், ஆல்ரவுண்டரான தீபக் ஹூடாவை ரூ.1.70 கோடிக்கும் சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ளது. அதேபோல், இளம் வீரர்களான முகேஷ் சவுத்ரி, ஷயீக் ரஷித் ஆகியோரை தலா ரூ.30 லட்சத்துக்கும், அன்ஷுல் கம்போஜை ரூ. 3.40 கோடிக்கும் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.
அரசுக்கு விஜய் கோரிக்கை: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.