“ஆணவம் வேண்டாம்...” - ராமதாஸ் குறித்த ஸ்டாலின் கருத்துக்கு தமிழிசை காட்டம்

By KU BUREAU

சென்னை: “மக்களுக்காக கருத்து கூறினால், வேலையில்லாமல் கருத்து சொல்கிறார்கள் என்பதா?” என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர்கள் கருத்து கூறினாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம். மக்களுக்காக கருத்து கூறினால் அவர்கள் வேலை இல்லாமல்தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது கூறிய கருத்துகள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துகள்தானா?

ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம். அதுவும் பாமக தலைவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பழி சொல்வதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலை வேலையில்லாமல் இதை சொல்லவில்லை.

தமிழகத்துக்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன். 2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது, யாருக்கு வேலை இல்லாமல் போகப்போகிறது என்பதை உணர்த்தும். யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை. யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE