விழுப்புரம்: தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டி (73). தனது மனைவி இறந்த பின்னர், பொதுச்சேவையில் ஈடுபட விரும்பிய இவர், ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று அதில் கிடைக்கும் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கும், பள்ளி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சென்று வழங்கி வருகிறார்.
அதன்படி, விழுப்புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தங்கி யாசகம் பெற்ற பாண்டியன், அதில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை விழுப்புரம் ஆட்சியரிடம் வழங்குவதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். முதல்வர் விழா ஏற்பாடுகளைப் பார்வையிட ஆட்சியர் சென்ற நிலையில், மக்கள் குறைதீர்க் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரியிடம் முதியவர் பூல் பாண்டி ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.
இதுகுறித்து, முதியவர் பூல் பாண்டி கூறியதாவது: "ஏற்கெனவே 3 முறை விழுப்புரம் வந்து முதல்வர் நிவாரண நிதி வழங்கியுள்ளேன். தற்போது 4 ஆவது முறையாக நிதியை வழங்கியுள்ளேன். அந்தந்த மாவட்டங்களில் யாசகம் மூலம் கிடைக்கும் தொகையை அங்கேயே வழங்கி விடுவேன். இதைத் தவிர பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் நிதியுதவி அளித்துள்ளேன்."என்று முதியவர் கூறினார்.