மழை வெள்ளம் பாதிக்காத வகையில் தமிழக மக்களை அரசு காக்கும்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

By இ.மணிகண்டன்

சாத்தூர்: மழை வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாத அளவுக்கு அரசு சமாளிக்கும் என்று வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் திருநங்கைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தின்கீழ் திருநங்கைகளுக்கு ரூ.1.28 கோடி மதிப்பில் 21 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன் முன்னிலை வகித்தார்.

வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருநங்கைகளுக்கான வீடுகளை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி, வீடுகளை ஒப்படைத்தார். அதோடு, திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள டீக்கடையையும் திறந்துவைத்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ”சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட நபர்களாக உள்ள திருநங்கைகளுக்கு வாழ்வழிக்கும் எண்ணத்தோடும், அவர்கள் பெயரை மாற்றி திருநங்கை என பெயர் சூட்டினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது 21 திருநங்கைகளுக்கு தலா ரூ.6.10 லட்சம் செலவில் வீடு கட்டி சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகளை செய்துகொடுத்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

திருநங்கைகள் வாழ்க்கைத் தரம் உயர டீக் கடையையும் திறந்து வைத்துள்ளோம். டெல்டா மாவட்டங்களில் 2 நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தகுந்த முன்னேற்பாடுகளை நாம் செய்துவைத்துள்ளோம். மழை வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க இடத்தையும் தயாராக வைத்துள்ளோம்.

பொதுமக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாத அளவுக்கு இந்த அரசு சமாளிக்கும். ராமநாதபுரத்தில் மழையால் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலம் முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், மண்டபம் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேங்கிய நீரை வெளியேற்றியுள்ளோம். குடியிருப்பு பகுதியில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியை அரசு முழுவதுமாக செய்துள்ளது.

தகுதியுள்ளோர் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். அதன்படி, தகுதியுள்ளோருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு அதையும் அரசு கவனிக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார். தகுதியுள்ள அனைவரையும் எந்த நேரத்திலும் அரசு விட்டுக்கொடுக்காது என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, விருதுநகர் பாலவனத்தம் அருகே உள்ள சென்னல்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு வகுப்பறை கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE