தென்காசி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டெங்கு காய்ச்சலை தடுக்க மழைநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில் உள்ள உபயோகமற்ற பொருட்களை மழைநீர் விழாத இடங்களில் சேகரித்து வைக்க வேண்டும். உபயோகமற்ற பொருட்களை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருப்பதால் குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் என்றும், குடிநீர் குழாய் உடைப்புகள் உடனடியாக சரி செய்யவும், திடக்கழிவுகள் தேக்கமடையாமல் அப்புறப்படுத்தவும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

எலி காய்ச்சலால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படலாம். எனவே மஞ்சள்காமாலை நோய் அறிகுறிகள் காணப்படும் நபர்கள் நாட்டு மருந்து சாப்பிட்டாலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ள பரிசோதனை வசதிகளை பயன்படுத்தி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனைவரும் குடிநீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து அருந்த வேண்டும். காய்ச்சல், சளி இருப்பவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE