விடுபட்டவர்களில் தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நாகை மாவட்டம் அ வுரித்திடலில் திமுக சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விவசாயிகள், மீனவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 2,400 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்டவை இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. முன்னோடி திட்டமான காலை உணவுத் திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் 1.16 கோடி மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். விடுபட்டவர்களில் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.
இதையெல்லாம் பார்த்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது திமுக கூட்டணி உடையாதா என்று அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறும். திமுக தலைவர் ஸ்டாலின் 2-வது முறையாக முதல்வராவார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சிக் கூட்டத்தில் பேசும்போது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க பணம் கேட்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அந்தக் கட்சியின் நிலை பரிதாபமாக உள்ளது. இவ்வாறு உதயநிதி பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கோவி.செழியன், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்