கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தேவையில்லை: அமைச்சர் சேகர்பாபு கருத்து

By KU BUREAU

கோயில் யானைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதால் புத்துணர்வு முகாம் தேவையில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கடந்த 18-ம் தேதி, கோயில் யானை தெய்வானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரைத் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், திருச்செந்தூருக்கு நேற்று வந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பாகன் உதயகுமார் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 2 லட்சம், கோயில் சார்பில் ரூ. 5 லட்சம், கோயில் தக்கார் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை, சிசுபாலன் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ.2 லட்சம், தக்கார் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் கோயிலுக்குச் சென்ற அமைச்சர், யானை தெய்வானையை பார்வையிட்டு, அதற்கு கரும்பு துண்டுகள் வழங்கினார். யானையின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உயிரிழந்த யானைப் பாகன் உதயகுமார் கோயில் பணியாளர் என்பதால், அவரது மனைவியின் கல்வித் தகுதிக்கு ஏற்றார்போல கோயிலில் பணி வழங்கவும், சிசுபாலனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த உதயகுமாரின் இரண்டு குழந்தைகளுக்கான கல்விச் செலவை மாவட்ட அமைச்சரும், மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோயில் யானை பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது. ஆனால், இரண்டு கவளங்களுக்கு மேல் உணவு உட்கொள்வதில்லை. பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்று, யானையை தற்போது பராமரித்து வருபவர் தெரிவித்தார்.

எனவே, யானையை நெருங்கிச் செல்ல தற்போது பொதுமக்களுக்கு அனுமதியில்லை. இன்னும் ஒரு வார காலம் யானையை தொடர்ந்து கண்காணித்து, பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலங்களில் யானைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அருகில் செய்யப்படாததால் புத்துணர்வு முகாம் தேவைப்பட்டது. தற்போது 26 கோயில்களில் 28 யானைகளை பராமரித்து வருகிறோம். எனவே, புத்துணர்வு முகாம் தேவைப்படவில்லை.

திருச்செந்தூரில் ரூ.45 லட்சத்தில் யானைக்கு குளியல் தொட்டி, நடைப்பயிற்சி, 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 3 மாதத்துக்கு ஒரு முறை வனத்துறையினர் வந்து யானையை முழுவதுமாக பரிசோதிக்கின்றனர்.

மதுரை கோயில் யானை நோய்வாய்பட்டபோது கண் சிகிச்சைக்காக டென்மார்க்கிலிருந்து மருத்துவர்களை வரவழைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, யானை புத்துணர்வு முகாம் தேவைப்படவில்லை. அதேநேரத்தில், வனம், கால்நடைப் பராமரிப்புத்துறை அலுவலர்கள் ஆலோசித்து, புத்துணர்வு முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினால், நிச்சயம் அதையும் ஏற்றுக்கொள்ள அறநிலையத் துறை தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதரன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உடனிருந்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE