குடியரசு தலைவர் வருகையையொட்டி வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் ஏற்பாடுகள் தீவிரம்

By ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்: குன்னூர் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருவதை முன்னிட்டு அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தமிழகத்தில், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உதகைக்கு 27-ம் தேதி வருகிறார். குடியரசு தலைவர் வருவதை அடுத்து உதகை தீட்டுக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் மூன்று ஷிப்ட் முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் தளத்தை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்களை கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், ஹெலிகாப்டர் தளம், தீட்டுக்கலிருந்து உதகை ராஜ்பவன் வரும் சாலையை சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
உதகை பூங்கா சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருவதுடன், ராஜ்பவனும் புது பொலிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

குடியரசு தலைவர் 28-ம் தேதி குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். இதனால், ராணுவ மையம் பகுதியை பொலிவு படுத்தும் பணி நடந்து வருகிறது.

குடியரசு தலைவருக்கு வரவேற்பு அளிக்க ராணுவத்தின் பாரம்பரிய குதிரை படையினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, முப்படைகள் அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் ராணுவ உயர் அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா, கூடுதல் ஆட்சியர் சங்கீதா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பு நடைமுறைகள், போக்குவரத்து மாற்றங்கள் உட்பட பல்வேறு முடிவுகள் குறித்து விவாதங்கள் நடந்தன.

அதில், தீயணைப்பு துறை, வனத்துறை, வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE