யுபிஐ பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு: மாநகர பேருந்து நடத்துநர்களுக்கு பயிற்சி

By KU BUREAU

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவியில் யுபிஐ மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை குறைவாக இருக்கிறது. இதை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 22, 23-ம் தேதிகளில் 20 முக்கிய பேருந்து நிலையங்களில் மாநகர போக்குவரத்து அதிகாரிகள் நடத்துநர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

மேலும், மூன்று வாரங்களுக்கு ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், 20 முக்கிய பேருந்து நிலையங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடத்துநர்கள் கூறும்போது, "பயணிகளுக்கு யுபிஐ பயன்பாடு அறிமுகப்படுத்தப் பட்டதே தெரியாத நிலை இருக்கிறது. எனவே, அனைத்து பயணிகளும் அறியும் வகையில் விழிப்பு ணர்வு முகாம்களை நடத்த வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE