இந்த ’வாட்ஸ்-அப்’ யுகத்தில் உண்மையான வரலாறு மக்களை சென்றடைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
திமுக மகளிர் அணி சார்பில் ‘கலைஞர் 100’ விநாடி- வினா இறுதிபோட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி விழாவுக்கு தலைமை தாங்கினார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார். திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்திரனராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ‘கலைஞர் 100’ விநாடி- வினா போட்டியில் முதலிடத்தைப் பிடித்த காஞ்சிபுரம் அணிக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும், இரண்டாம் பரிசாக விழுப்புரம் அணிக்கு ரூ.6 லட்சமும், மூன்றாம் பரிசாக சிவகங்கை அணிக்கு ரூ.3 லட்சமும், நான்காம் பரிசாக மதுரை அணிக்கு ரூ.1 லட்சமும் வழங்கினார்.
பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ் சமுதாயத்தை அடிமைப்படுத்தியவர்களையும் தமிழினத்தின் வளர்ச்சியை தடை செய்ய நினைத்தவர்களையும் நோக்கி, பகுத்தறிவு பாதையில் சுயமரியாதையோடு வினா எழுப்பியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களை, திட்டங்களை உருவாக்கி தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கான விடையாகவும் அவர் இருந்தார். இந்த தமிழகமும், தமிழினமும் ‘கலைஞர் 100’ மட்டுமல்ல ‘கலைஞர் 1000’ கூட கொண்டாடும்.
» சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அறநிலைய துறை சார்பில் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட், பிளாஸ்க்
» பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு இல்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்
ஏனென்றால் தமிழகத்தில் இருக்கும் பலகோடி மக்களுக்கு ’லைஃப்’ கொடுத்ததால் தான் கருணாநிதி இன்னும் ‘லைவ்’ ஆக இருக்கிறார். அதை வெளிக்காட்டு விதமாக இந்த போட்டி அமைந்திருக்கிறது. சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்ற இந்த போட்டி மூலம் தமிழகம் முழுவதும் திராவிட இயக்கத்தின் வரலாறு இளம்தலைமுறையிடம் விதைக்கபட்டுள்ளது. புதிய சிந்தனையாளர்களை உருவாக்கியுள்ளது.
இது வாட்ஸ்-அப் யுகம். யாரோ ஒருவர் வாட்ஸ்அப்பில் பகிரும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் உண்மை என்றும் நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், உண்மையான வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக அனைவரும் அனைத்து புத்தகங்களையும் படித்துவிட முடியாது. இதற்கு இதுபோன்ற போட்டிகள் சிறந்த வழிகளாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கனிமொழி பேசும்போது, “எதிர்கால தலைமுறையினரை வளர்க்கும் கட்சி திமுக. ஆனால் சிலர் அம்பானி, அதானியை வளர்ப்பதற்காகவே கட்சியை வளர்த்து கொண்டிருக்கின்றனர். இதுதான் மற்றவர்களுக்கும் திமுகவுக்கு உள்ள வித்தியாசம். எந்த மாநிலத்தில் வெற்றி வந்தால் என்ன, தமிழகம் என்றும் திராவிட இயக்கத்தின் கையில் தான்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ், திமுக துணை பொதுச்செயலாளர் ஆர்.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, த.வேலு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் தொண்டரணிச் செயலாளர் நாமக்கல் ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.