பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு இல்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

By KU BUREAU

பழனிசாமியுடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று முன்தினம் சந்தித்தார். அதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மீது கருத்து வேறுபாடு நிலவுவதால், இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இச்சந்திப்பு தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் நவ.22-ம் தேதி நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.

அதன்பிறகு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்போது, முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது வருத்தமளிக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில், அதிமுகவை பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. பழனிசாமிக்கும், எனக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE