ரயில்வே தொழிற்சங்க தேர்தல்: முதன்முறையாக களமிறங்கும் பாஜக சார்பு சங்கங்கள்!

By என்.சன்னாசி

மதுரை: ரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி டிச. 4, 5-ல் நடக்கும் அகில இந்திய ரயில்வே தொழிற் சங்க தேர்தலில் முதன்முறையாக பாஜக சார்பு தொழிற்சங்கங்கள் களமிறங்குகின்றன.

இது தொடர்பாக எஸ்ஆர்எம்யு தொழிற்சங்க நிர்வாகி ராம்குமார் கூறியதாவது: 1920-ல் இந்தியாவில் தொடங்கிய முதல் தொழிற் சங்கம் ஏஐடியுசி நாட்டில் பெரிய துறையான ரயில்வேயில் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.

பிரச்சினைகளை தேசம் முழுக்க ஒரே குரலில் ஒலிக்க 1924-ல் ஏஐடியுசியின் துணை அமைப்பாக தொடங்கிய முதல் ரயில்வே தொழிற்சங்கம் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் (ஏஐஆர்எப்). 1942-ல் காந்தியடிகள் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் நேருவின் வேண்டுகோளை ஏற்று ஏஐஆர்எப் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது.

ராம்குமார்

1947-ல் சுதந்திரம் பெற்ற பிறகு ஆளும் காங்கிரஸ் கட்சி தங்களுக்கான ஒரு தொழிற்சங்கம் வேண்டும் என ஐஎன்டியுசி-ஐ ஆரம்பித்தது. 1948-ல் அதன் ரயில்வே அமைப் பாக இந்திய தேசிய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் ஆரம்பிக் கப்பட்டது. உடனே அவ்வமைப் புக்கு அரசும் அங்கீகாரம் அளித்தது. எப்படி அங்கீகாரம் கிடைத்தது என, கேள்வி எழுந்த போது, 30 சதவீதம் ரயில்வே தொழிலாளர்கள் உறுப்பினராக இருந்தால் அங்கீகாரம் வழங்கலாம் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தொழிற் சங்கமாக அங்கீகாரம் பெற்றது.

2003-ல் வாஜ்பாய் தலைமை யிலான பாஜக ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ் குமார், பாஜகவின் பிஆர்எம்எஸ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் நடத்திய ஆர்எம்யு-வுக்கும் அங்கீகாரம் வழங்குவதாக உத்தரவிட்டார். ரயில்வே வாரிய உத்தரவின்படி ஏற்கெனவே உள்ள 2 அமைப்புகளுக்கு 30 சதவீதம் ரயில்வே தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பதாக கருதி 2 அமைப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கிடையில் எஸ்ஆர்எம்யு அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் கண்ணையா சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலமே அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று உத்தரவு வாங்கினார். ரயில்வே வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதிலும், ரகசிய வாக்கெடுப்பு மூலமே அங்கீகாரம் அளிக்க வேண்டும் என, உத்தரவிட்டது.

இதன்படி, 2007-ல் ரயில்வேயில் முதல் முறையாக தேர்தல் நடந்தது. மொத்த ஊழியர்களில் 30 சதவீதம் அல்லது வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் 35% இதில் ஏதேனும் ஒன்றை பெறும் அமைப்பு அங்கீகாரம் பெறும். ரயில்வே வாரியத்தில் அங்கீ காரம் பெற குறைந்தபட்சம் 6 மண்டலங்களில் அந்த அமைப்பு அங்கீகாரம் பெற்றி ருக்க வேண் டும். பதவிக் காலம் 6 ஆண்டுகள் அல்லது அடுத்த தேர்தல் நடத்தும் வரை.

பல்வேறு காரணங்களால் ரயில்வே வாரியம், மத்திய அரசு தேர்தல் நடத்த ஈடுபாடின்றி இருந்தது. மேலும், ரகசிய வாக்கெடுப்பு முறையில் மாற்றம் செய்ய முயற்சிக்கப்பட்டது. பல அழுத்தம் காரணமாக ரயில்வே வாரியம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டு டிசம்பர் 4, 5 தேதிகளில் நாடு முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

தெற்கு ரயில்வேயில் அங்கீகாரத்தில் இருக்கும் எஸ்ஆர்எம்யு, காங்கிரஸ் கட்சியின் எஸ்ஆர்இஎஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் டிஆர்இயு, பாஜகவின் டிஆர்கேஎஸ் உள்ளிட்ட 6 சங் கங்கள் களத்தில் உள்ளன. ரகசிய வாக்கெடுப்புக்கு பிறகு டிசம்பர் 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். தேசம் முழுவதும் சுமார் 11.5 லட்சம் பேர் வாக்களிக்கும் இத்தேர்தலில் எஸ்ஆர்எம்யு, ஏஐஆர்எப் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக அரசியல் சார்பு சங்கங்களுக்கு இடையே தான் முக்கிய போட்டி உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தொழிற் சங்கம் முதன்முறையாக கள மிறங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE