காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 400 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்றிருக்கும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் இன்று (நவ. 23) அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காங்கயத்தில் கால்நடை விவசாயிகள் பலரும் கால்நடைகளுடன் திரண்டதை தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம், மூலனுார், குண்டடம், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் உடுமலை உட்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக, தெரு நாய்கள் கடித்து, ஆடுகள் பலியாவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது கால்நடை வளர்ப்போர் மத்தியில் கடும் அதிருப்தி, விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. கால்நடைத்துறை சார்பில் ஆறு மாதத்தில் 295 ஆடுகள் பலியானதாகவும், விவசாயிகள் தரப்பில் 400-க்கும் அதிகமான ஆடுகள் பலியானதாக கூறப்படுகிறது.
தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், இறந்த ஆடுகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த, ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, நாய்கள் கடித்ததால் பலியான ஆடுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, ஆடுகள் இறப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது' என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, அரசிடம் இருந்து இழப்பீடு தொகை பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும் என, திருப்பூர், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
» மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? - ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு பதில்
» நாம் அதிகாரத்துக்கு வந்தால் மற்றவர்களுக்குப் பங்களிக்கலாம்: மயிலாடுதுறை எம்பி சுதா
ஆனால் அரசு இதுவரை இழப்பீடு வழங்கப்படாததும், தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காததும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இன்று காலை முதல், வெள்ளகோவில் கிளை கால்வாய் பாசன சபை ஒருங்கிணைப்பில் அனைத்து விவசாயிகள் அமைப்புகள் சார்பில் விவசாயிகள் திரண்டு, ஆடுகள், காங்கயம் காளைகள், குதிரைகள் உள்ளிட்டவைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்திற்காக காங்கயம் - கரூர் சாலையில், பகவதிபாளையம் பகுதியில் டிராக்டர்கள் மற்றும் கால்நடைகளுடன் விவசாயிகள் திரண்டு கொண்டிருக்கின்றனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காங்கயம் டிஎஸ்பி தலைமையில் 100-க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளை, ரேஸ் குதிரை, ரேக்ளா காளைகள், ஆடுகள் மற்றும் மாடுகளுடன் விவசாயிகள் காங்கேயம் பகவதி பாளையத்தில் திரண்டு வருகிறார்கள்.
வட்டாட்சியர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர். விவசாயிகள் கால்நடைகளை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தரப்பில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.