சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலிருந்து மன்னார் வளைகுடா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 25-ம் தேதி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 26, 27, 28-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வரும் 25, 26-ம் தேதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
» 72 வருடங்களுக்குப் பின் பெர்த் மைதானத்தில் புதிய சாதனை: ஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்தியா
» சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம்: ரஜினிகாந்தை சந்தித்ததே அரசியல்தான் - சீமான்