ஆசிரியர்கள் நியமனம் அவுட்சோர்சிங் முறையில் நடக்காது: அண்ணா பல்கலை. பதிவாளர் விளக்கம்

By KU BUREAU

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் ஒருபோதும் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பதிவாளர் உறுதிபட தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் இனிமேல் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட டீன்கள் மற்றும் பல்வேறு மையங்களின் இயக்குநர்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் கடந்த 20-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாமக தலைவர் அன்புமணி நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

உயர்கல்வி மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் இத்தகைய முடிவை எடுத்திருக்க மாட்டார்கள். உயர்கல்வியின் தரத்தையும், சமூக நீதியையும் சீர்குலைக்கும் அவுட்சோர்சிங் முறை நியமனத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது’ என்று தெரிவித்திருந்தார்.

சுற்றறிக்கை வெளியீடு: இதற்கிடையே, பல்கலைக்கழக டீன்கள், பல்வேறு மையங்களின் இயக்குநர்களுக்கு பதிவாளர் 21-ம் தேதி அனுப்பிய மற்றொரு சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியாளர்கள் மட்டுமே தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றிய தகவல் நேற்று வெளியான நிலையில், அன்புமணி மற்றொரு அறிக்கை வெளியிட்டார். ‘ஆசிரியர்கள் நியமனத்தில் அவுட்சோர்சிங் முறை கடைபிடிக்கப்படாது என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு பாமகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அண்ணா பல்கலைக்கழகம் தவறை திருத்திக்கொண்டதில் மகிழ்ச்சி. பதிவாளரின் பழைய சுற்றறிக்கையை பாமக கண்டித்திருக்காவிட்டால் ஆசிரியர்கள் நியமனத்திலும் அவுட்சோர்சிங் முறை திணிக்கப்பட்டிருக்கும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலை. விளக்கம்: இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘அவுட்சோர்சிங் முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது கவனக்குறைவால் தவறுதலாக உள்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தவறை சரிசெய்து திருத்தப்பட்ட உள்சுற்றறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. ஆசிரியர்கள் ஒருபோதும் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட மாட்டார்கள் என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE