மாநில அளவில் பயிர் சேதத்தை கண்காணிக்க குழு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

By KU BUREAU

சென்னை: கனமழையால் ஏற்படும் பாதிப்பை வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு பயிர்சேத நிலை கணக்கிடப்பட்டு வருவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் நவ.23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கனமழை முதல் அதிகனமழை டெல்டா மாவட்டங்களில் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மழை தொடர்பாக விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழையால் ஏற்படும் பாதிப்பை வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு பயிர்சேத நிலை கணக்கிடப்பட்டு வருகிறது. இப்பருவத்துக்கு, டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான யூரியா 53,366 டன், டிஏபி 9,181, பொட்டாஸ் 14,196 மற்றும் காம்ப்ளக்ஸ் 24,483 டன் இருப்பில் உள்ளன.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக வயல்களில் நீர் தேங்கும்பட்சத்தில், நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக 21 நீர் இறைக்கும் கருவிகள், 805 விசையிலான மரம் அறுக்கும் கருவிகள், 60 மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் 85 மண் தள்ளும் இயந்திரங்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையின்போது விவசாயிகள், மழைநீர் தேங்கும்பட்சத்தில் வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்தல் வேண்டும். மழைக் காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொள்ளி இடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளித்தல் வேண்டும். தூர் வெடிக்கும் பருவத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட வாய்ப்புள்ளது. எனவே, மழை நின்று நீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து 17 கிலோ பொட்டாசியத்துடன் கலந்து வயலில் இடுதல் வேண்டும்.

மழைக்காலத்தில் புகையான் பூச்சி தாக்குதலால் பொருளாதார சேத நிலைக்கு மேல் செல்லும் பொழுது வேம்பு சார்ந்த பூச்சி மருந்தாகிய அசாடிராக்டின்- 0.03 சதவீதம் மருந்தினை வேளாண் துறையின் பரிந்துரையின்படி உபயோகப்படுத்தலாம். மேலும், சம்பா பருவத்துக்கான பயிர்க் காப்பீடு செய்ய, நவ.30-ம் தேதி கடைசி நாள் என்பதால் விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE