“செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ரத்தாக வாய்ப்பு” - சவுக்கு சங்கர் கருத்து

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் உள்ள வழக்கறிஞர் கரிகாலன் அலுவலகத்திற்கு இன்று (நவ.22ம் தேதி) மாலை சென்ற சவுக்கு சங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: “கடந்த 3 ஆண்டுகளில் அதானி குழுமத்தோடு தமிழக அரசு குறிப்பாக தமிழக மின்வாரியம் எந்த விதமான ஒப்பந்தங்களையும் செய்யவில்லை என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிப்படையாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதானியோடு நேரடியாக தமிழக அரசு ஒப்பந்தம் செய்யவில்லை என்றாலும், மத்திய அரசு நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. அமெரிக்காவில் அதானி குழுமத்தின் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால் மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து மாநில அரசுகள் நேரடியாக மின்சாரம் வாங்குவதில்லை. மின்சாரம் வாங்க தயங்குகிறார்கள்.

அப்படி தயங்கும் மாநில அரசுகளுக்கு ஏராளமான லஞ்சம் கொடுத்து மாநில அரசுகளை இந்த மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்குவதற்கு அதானி நிறுவனம் முயற்சித்த ஆதாரங்கள் எங்களிடம் சிக்கி உள்ளது என்பதை குறிப்பிட்டுதான் அதானி குழுமம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அப்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் சட்டீஸ்கர், ஆந்திரப் பிரதேஷ், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இதுபோல லஞ்சம் பெற்றுக்கொண்டு மின்சாரம் வாங்கியுள்ளன என குறிப்பிட்டு இருக்கிறது. இதை முழுமையாக மறைத்து முழு பூசணிக் காயை சோற்றில் மறைக்க வேண்டும் என்ற எணணத்தோடு தான் அதானியோடு நேரடியாக ஒப்பந்தம் செய்யவில்லை என்று சொல்கிறார்.

அதானியிடம் இருந்து நேரடியாக மின்சாரம் வாங்க லஞ்சம் கொடுத்துள்ளார்கள் என்று கூறவில்லை. மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து மாநில அரசுகள் மின்சாரம் வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்றே கூறப்பட்டுள்ளது. எனவே அதானி நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை அவர் செய்துக் கொண்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகு அவருக்கு மீண்டும் அதே துறை அமைச்சரவை கொடுக்கப்பட்டுள்ளது. சிறை செல்வதற்கு முன்பு எப்படி கொள்ளையடித்தாரோ அதே கொள்ளைகளை மீண்டும் இந்த முறையும் தொடங்கியுள்ளார். விரைவில் செந்தில்பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டிய மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. சிறையிலிருந்து வந்த 2, 3 நாளில் செந்தில்பாலாஜி அமைச்சரானதை உச்சநீதிமன்றம் அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ளாது. ஜாமீனை ரத்து செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது” என்று சவுக்கு சங்கர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE