இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்: ஐகோர்ட் விருப்பம்

By கி.மகாராஜன்

மதுரை: இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செல்போன் திருட்டு வழக்கில் ஜாமீன் கோரி மதுரையைச் சேர்ந்த 19 வயது இளைஞர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வாதம், "19 வயதாகும் மனுதாரர் மீது செல்போன் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கைதான நாளில் அவர் மீது மேலும் 4 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

அரசுத் தரப்பு வாதத்தில், மனுதாரர் தொடர்ச்சியாக செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் சமுதாயத்திற்கு தொந்தரவாக செயல்பட்டு வருகிறார். ஆகவே ஜாமீன் வழங்கக் கூடாது" என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,’ஒரு இளைஞர் ஒரு குற்றம் செய்து, பின்னர் அது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்தாலும், காவல் துறையினர் தன்னை வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பது தெரியவந்ததும், அந்த இளைஞர் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட முடிவு செய்கிறார். ஒரு கூட்டத்தின் தலைவனாகிறான். குற்றவாளிகளாக மாறிய பல சிறார்களின் கதை இது.

இளம் குற்றவாளிகளை சீர்திருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழகம் முழுவதும் பரவவில்லை. இந்த வழக்கில் ஜாமீன் கோரியுள்ள மனுதாரர் செப்டம்பர் 29 முதல் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது. மனுதாரர் மதுரை நீதித்துறை நடுவர் முன்பாக தினமும் காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்" என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE