கிருஷ்ணகிரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தவெக நிர்வாகி - உடல் உறுப்புகள் தானம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த தவெக நிர்வாகியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையை சேர்ந்த பழ வியாபாரி கணேஷ் (32). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் நகர நிர்வாகியாக இருந்தார். கடந்த 20ம் தேதி காலை 7 மணியளவில், இவர் லண்டன்பேட்டை அருகில் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து, அவரது 2 சிறுநீரகங்களும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும். கல்லீரல் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி மருத்துவமனைக்கும், இதயம் சென்னை எம்ஜிஎம்., மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

மேலும், உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய கணேசின் உடலுக்கு இன்று(22ம் தேதி) கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி மற்றும் மருத்துவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திர சேகர், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ், நிர்வாக அலுவலர் சரவணன் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தவெக நிர்வாகி கணேஷ்

இதேபோல், தவெக நிர்வாகிகள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த பில்லனகுப்பத்தை சேர்ந்த தினேஷ் பாபு (35) என்பவர் கடந்த 14ம் தேதி இரவு, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE