எட்டயபுரம் அருகே காட்டுப் பன்றி தாக்கி 3 விவசாயிகள் காயம்

By ரெ.ஜாய்சன்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காட்டுப் பன்றி தாக்கியதில் மூன்று விவசாயிகள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், கயத்தாறு, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம் தொடர் கதையாக நீடித்து வருகிறது. மானாவாரி பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் விவசாயிகளையும் தாக்கி காயப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். புதூர் அருகேயுள்ள கம்பத்துபட்டி கிராமத்தை சேர்ந்த அய்யரப்பன் என்ற விவசாயி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பன்றி கடித்ததில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், எட்டயபுரம் அருகே தற்போது பன்றி தாக்கி 3 விவசாயிகள் பலத்த காயமடைந்துள்ளனர். எட்டயபுரம் வட்டம் அயன்கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆ.மோகன்ராஜ் (62) என்ற விவசாயி இன்று காலை ஊருக்கு வடபுறம் உள்ள தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது, மக்காச்சோளம் பயிருக்குள் மறைந்திருந்த ஒரு பன்றி பயிர்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது. இதனை கண்ட மோகன்ராஜ் பன்றியை சத்தம் போட்டு விரட்டியுள்ளார். அப்போது பன்றி மோகன்ராஜை தாக்கியுள்ளது. இதில், கையில் காயமடைந்த மோகன்ராஜ் அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு போன் செய்துள்ளர். இதனை தொடர்ந்து சண்முகராஜ் (54), ராமசாமி (62) ஆகியோர் அங்கு விரைந்து வந்துள்ளனர்.

அவர்களுடன் சேர்ந்து பன்றியை விரட்டும் பணியில் மோகன்ராஜ் ஈடுட்டுள்ளார். இம்முறை, மூன்று பேரையும் பன்றி கடுமையாக தாக்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து அயன்கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில்,"காட்டுப் பன்றிகளின் அட்டூழியத்தால் விவசாயிகள் தங்கள் பயிருக்கு உரமிடவோ, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களை பெரும் சேதப்படுத்தி வருகிறது. இதனை முற்றிலும் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

பன்றிகளின் அட்டூழியத்தால் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும், சாகுபடி செய்வதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பன்றிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பன்றிகளால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதத்துக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று வரதராஜன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE