திண்டுக்கல்: வரும் சட்டசபை தேர்தலில் இளைஞர்களை அதிமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டால் நாம் வெற்றிபெறலாம் என திண்டுக்கல்லில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு யோசனை கூறியுள்ளனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி தலைமை வகித்தார். பேரவை இணைச்செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் கலந்துகொண்டு பேசினார். கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை ஒன்றியம், நகரம், பேரூர் வாரியாக, முன்னாள் அமைச்சர் செம்மலை கேட்டறிந்தார்.
அப்போது பேசிய ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட அகரம் பேரூர் செயலாளர் சக்திவேல், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிமுகவில் தொடர்ந்து இருக்கின்றனர். அவர்களிடம் நாம் சென்று ஓட்டுக்கள் கேட்காவிட்டாலும் நமது கட்சிக்கு தான் வாக்களிப்பர். ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள 20 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நமது கட்சியில் அதிகம் இல்லை. அவர்களை அதிகம் ஈர்க்க வேண்டும்.
நமது குடும்பத்தில் உள்ள இளைஞர்களே நம்முடன் கட்சிப் பணிக்கு வராமல் வேறு கட்சியில் இணைந்து செயல்படும் நிலை உள்ளது. ஒரு கிளைக்கு 50 இளைஞர்களையாவது நமது கட்சியில் சேர்க்க வேண்டும். இளைஞர்களை நமது கட்சிக்கு ஈர்த்துவிட்டால் நாம் வருகின்ற சட்டசபை தேர்தலில் உறுதியாக வெற்றி பெறலாம் என்றார்.
» கரூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
» கம்பம்: சபரிமலை பக்தர்கள் சென்ற கார் விபத்து; சிறுவன் உயிரிழப்பு
தொடர்ந்து பேசிய கட்சி நிர்வாகிகள் கட்சி வளர்ச்சி, தேர்தல் பணி குறித்து கருத்து தெரிவிக்கிறேன் என கட்சித் தலைமையை புகழ்ந்து பேசினர். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, கட்சியினர் அனைவருக்கும் உறுப்பினர் கார்டு சென்றடைந்து விட்டதா என சரி பார்க்க வேண்டும். பூத் வாரியாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என கண்காணிக்க வேண்டும்.
நமது அனைவரின் நோக்கம் எல்லாம் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும். இது யார் கையில் உள்ளது என்றால் உங்கள் கையில் தான் உள்ளது. இதை நாம் செயலில் காட்ட வேண்டும். எனவே அனைவரும் திறம்பட செயல்பட்டு அதிமுக ஆட்சி அமைய பாடுபடவேண்டும் என்றார்.