சென்னை: நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில், நடிகை கஸ்தூரி நேற்று மாலை சிறை யிலிருந்து விடுவிக்கப்பட்டார். தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நடிகை கஸ்தூரியை கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹைதராபாத்தில் சென்னை போலீஸார் கைது செய்தனர். மறுநாள் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பின்னர், நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று மாலை புழல் சிறையிலிருந்து கஸ்தூரி விடுவிக்கப்பட்டார். அப்போது, செய்தியாளர் களிடம் பேசிய அவர், ‘‘என்னை குடும்பம்போல் பாதுகாத்த நண்பர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் வித்தியாசம் இன்றி ஆதரவு தந்த அரசியல் தலைவர்கள், என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி. ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கும் மனம் மிகுந்த நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி’’ என்று தெரி வித்தார்.