கரூர்: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அதானி நிறுவனத்துடன் கடந்த 3 ஆண்டுகளாக வணிக ரீதியான தொடர்பு இல்லை என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக, அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். பல மாநிலங்கள் அதில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு என ஒருவரி சேர்க்கப்பட்டுள்ளது. இதை வைத்து அதானிக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
மத்திய அரசுடன் ஒப்பந்தம் தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளாக அதானி நிறுவனத்துடன் எந்த விதமான வணிக ரீதியிலான தொடர்பும் இல்லை. தமிழகத்தின் மின்தேவையை கருத்தில் கொண்டு மத்திய மின்சார துறையிடம் இருக்கும் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்துடன் 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் தகவல்களை பதிவிடுபவர்கள் தெளிவுப்படுத்திக்கொண்டு பதிவிடவேண்டும். என்னிடமோ அல்லது மின் துறை அதிகாரிகளிடமோ கேட்டால் தெளிவுப்படுத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
» அதானி குழும லஞ்ச பட்டியலில் மின்வாரியம்; தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
» டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 11 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி