சென்னை: அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இது வரும் 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதனால் வரும் 23-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
வரும் 25-ம் தேதி கடலோர தமிழகத்தில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 26, 27-ம் தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு இலவச 24 மணி நேர ஆயுர்வேத சிகிச்சை: தினமும் 1,000 பேர் பயனடைவர்
» விசிக மீது நம்பிக்கை வரும்போது ஆட்சி அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள்: திருமாவளவன்