பழநி: தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வரும் போது மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பார்கள் என்று கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
பழநியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று வந்த திருமாவளவன் மலைக் கோயிலுக்குச் சென்று தண்டாயுதபாணி சுவாமி, போகர் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார். பின்னர், படிப்பாதை வழியாக அடிவாரத்துக்கு வந்த அவர், புலிப்பாணி ஆசிரமத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து வெளியே வந்த அவரை சூழ்ந்த சாலையோர வியாபாரிகள், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழநி முருகன் கோயிலுக்கு உட்பட்ட மெட்ரிக். பள்ளியில் 6 முதல் 16 ஆண்டுகள் வரை உரிய கல்வித் தகுதியுடன் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து துறை அமைச்சர் சேகர்பாபு பரிசீலனை செய்ய வேண்டும்.
நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பழநி மலையடிவாரத்தில் சாலையோர வியாபாரிகள், தங்களது வியாபாரத்தை செய்ய விடாமல் தடுக்கப்படுகின்றனர். தமிழக அரசு அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் கொடுக்கும் தீர்ப்பு. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வரும்போது, பொதுமக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பார்கள். ஆட்சி அதிகாரம் என்பது உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கொடுக்கும் அங்கீகாரம். இவ்வாறு அவர் கூறினார்.
» போலீஸ் தடுத்தாலும் மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழாவை நடத்துவோம் - வன்னியர் சங்கம் உறுதி
» குடிநீர் வரியை மாதம் ரூ.200 ஆக உயர்த்திய மணப்பாறை நகராட்சியை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா