புதுச்சேரி: போலீஸார் தடுத்தாலும் தடையை மீறி மாமல்லபுரத்தில் சித்திரைத் திருவிழா நடைபெறும் என்று வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி அறிவித்துள்ளார்.
பாமக, வன்னியர் சங்கம் மற்றும் உழவர் பேரியக்க அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி தவளக்குப்பத்தில் நேற்று நடைபெற்றது. பாமக மாநில அமைப்பாளர் கணபதி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் பாமகவால் நடத்தப்பட உள்ள சித்திரைத் திருவிழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி பேசியதாவது: புதுச்சேரியில் முதல்வர் வீட்டு வாயிலில் கொலை நடக்கிறது. அடிக்கடி கொலை நடக்கும் பகுதியாக புதுச்சேரி மாறிவிட்டது. தமிழகத்திலும் கொலைகள் அதிகரித்துவிட்டன.
மாமல்லபுரத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாமக சார்பில் சித்திரைத் திருவிழா மற்றம் வன்னியர் சங்க இளைஞர் மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாட்டுக்கு இளைஞர்கள் திரண்டு வர வேண்டும். போலீஸார் தடுத்தால், தடையை மீறி இந்த மாநாடு நடத்தப்படும். அடுத்தும் எங்கள் ஆட்சிதான் என்று உதயநிதி கூறுகிறார். இதற்குப் போட்டியாக ஒரு சினிமாக்காரர் (நடிகர் விஜய்) மாநாடு நடத்தி, 2026-ல் ஆட்சி அமைப்போம் என்கிறார். அடுத்த தேர்தலில் ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெற மாட்டார். இவ்வாறு பு.தா.அருள்மொழி பேசினார்.