ஈரோடு: “மகளிர் உரிமைத்தொகை பெறும் 9 லட்சம் பெண்கள், அத்தொகையை கூட்டுறவு வங்கிகளில் மாதம் தோறும் டெபாசிட் செய்து வருகின்றனர்” என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
ஈரோட்டில் இன்று நடந்த நிகழ்வில் ரூ.25 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், சில கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளின் பதவிக்காலம் இன்னும் முடிவடையவில்லை.
அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்ட 40 லட்சம் போலி உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும், தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தற்போது 65 சதவீதம் பேர் இணைத்துள்ளனர். இப்பணிகள் நிறைவுற்ற பின், முறையான உறுப்பினர்களைச் சேர்த்து, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.
தற்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் இணையத்தின் கீழ் இணைக்கும் பணி 60 சதவீதம் முடிந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.6000 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது.
» சாலை விபத்தில் மதுரை தவெக நிர்வாகி உயிரிழப்பு - பொதுச் செயலாளர் நேரில் அஞ்சலி
» குமரியில் பருவமழை முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் மீட்புக் குழு!
திமுக ஆட்சியில், இது இரு மடங்கு உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.14 ஆயிரத்து 500 கோடியைத் தாண்டியுள்ளது. அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மொத்த வணிகம் ஆண்டுக்கு ரூ.76 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது. இதனை ஒரு லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகை பெறும் 9 லட்சம் பெண்கள், தாங்களாக முன்வந்து, தங்களது உரிமைத் தொகையான தலா ரூ 1000-த்தை, கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதில் எந்த நிர்பந்தமும் இல்லை” என அவர் தெரிவித்தார்.